Showing posts with label girl friend. Show all posts
Showing posts with label girl friend. Show all posts

Thursday, December 7, 2017

நட்பெனும் காவியம்

எந்தன் ஆருயிர் தோழியே அறிவாயா? 


என் வாழ்வில் வந்த வரம் நீ என? 
ஒன்றாய் உழைத்த நாட்களில் 
ஒரு கணப்பொழுது கிடைக்கப்பெறின் 
ஓராயிரம் கதை பேசினோம் 

இதயத்தில் வலி இருப்பின் அதற்கு 
உன் இதமான வார்த்தைகள் மருந்தாயின 
உந்தன் பாசமும் நேசமும் எந்தன் 
வாழ்வை ஒளிமயமாக்கின 
என் வாழ்வில் கவிதையான நட்பே 

வருடங்கள் பல உருண்டோடிவிட்டது 
வேலை மாறி வேறிடம் நான் வந்து 
இடம் மாறினாலும் என் இதயம் மாறவில்லை 
நாம் பகிர்ந்து கொண்ட பாச தருணங்கள் 
அழியா ஓவியமாய் என் மனதில் என்றென்றும்

என்றும் நினைத்ததில்லை இப்படி 
நாட்கள் பல பேசாதிருப்போமென! 
ஒவ்வொரு முறை உனை அழைத்தபோதும் 
நேரமில்லை என்றாய் எனை அழைக்க 
உண்மை என அறிந்தும் மனதில் சிறு வலி 

குறுஞ்செய்தி அனுப்பினேன் நொடி நேரம் 
உனக்கு கிடைக்குமென நினைத்து 
அதற்கும் பதில் இல்லை எனும்போது!! 
அறிவேன் உனக்கு அலுவல் பல எனினும் 
நேரமின்மை எனக்கும் தானே! 

அழைக்க வில்லை எனினும் 
மறக்கவில்லை என்றாய் நீ 
பேசவில்லை என்றாலும் 
நான் உந்தன் நினைவின்று 
அகல வில்லை என்றாய் நீ 

இருப்பினும் அன்பு தோழியே! 
அவ்வப்போது ஒரு வார்த்தை 
அலை பேசியாயினும் அன்றி 
அலை செய்தியாயினும் சரி 
வந்தால் மகிழ்வேன் நட்பே!